இந்தூர்:
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித்வெமூலா தற்கொலை செய்துகொண்டபோது எழுதிவைத்த கடிதம் மிகுந்தவலியை ஏற்படுத்தியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி கூறியுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பள்ளியொன்றில் நடைபெற்ற விழாவில், புதிய இந்தியாவுக்கான திட்டங்கள் என்ற தலைப்பில் வருண்காந்தி பேசினார். அப்போது அவர், ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் ஆய்வு படிப்பில் படித்த தலித் மாணவர் ரோஹித் வெமூலா கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவர் எழுதிவைத்த கடிதத்தில் தலித் சமூகத்தில் பிறந்ததால்தான் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்று எழுதியிருந்த வரிகள் தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியதாக கூறினார்.
இந்திய அரசியல் சட்டம் பாரபட்டசமின்றி சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எழுதப்பட்டிருந்தாலும், 37 சதவித தலித்துகள்
வறுமைக்கோட்டுக் கீழே வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்பாகவே பெரும்பாலான தலித் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் வருண்காநதி கூறினார். அரசியல் ஜனநாயகம் தங்களுக்குத் தேவையில்லை, சமூக ஜனநாயகம் தேவை என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ரோஹித் வெமூலாவை தற்கொலை செய்ய தூண்டியதாக பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.