தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே டி-20 போட்டிகளில் கேப்டனாக உள்ள ரோஹித் ஷர்மா பி.சி.சி.ஐ. எதிர்பார்க்கும் திறனை வெளிப்படுத்தியதால் அவருக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக தேர்வு செய்திருக்கிறது.

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக உள்ள விராட் கோலி கடந்த சில போட்டி தொடரில் சறுக்கலை சந்தித்து வருகிறார். இதனால் இவருக்கு பதில் வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

ஆனால் தனது கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் செயல்பட்டு வந்த விராத் கோலி 2023 ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டி தொடர் முடியும் வரை கேப்டனாக நீடிக்க நினைத்திருந்தார்.

இந்திய அணிக்காக விராத் கோலி செய்த சாதனைகளை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியில் இருந்து கௌரவமாக வெளியேற்ற நினைத்த பி.சி.சி.ஐ.-யின் எண்ணத்திற்கு மாறாக முட்டுக்கட்டை போடும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருந்ததால், இந்த அதிரடி அறிவிப்பை பி.சி.சி.ஐ, எடுக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.