ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெள்ளை உடையில் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. நான் தொடர்ந்து இந்தியாவை ஒருநாள் போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று ரோஹித் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோஹித், 2022 இல் விராட் கோலியிடமிருந்து அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து 24 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். அவர் 12 சதங்கள் உட்பட மொத்தம் 4301 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் ரோஹித்தின் ஓய்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கேப்டனாக சமீபத்தில் பணியாற்றிய ரோஹித், ஒரு கட்டத்தில் தனது மோசமான ஃபார்மைக் கருத்தில் கொண்டு வெளியேறினார். இந்தியா தொடரை 4-1 என இழந்தது, கடந்த ஆண்டு இறுதியில் MCG-யில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் ரோஹித்தின் கடைசி டெஸ்ட் ஆகும்.

2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் ரோஹித் முதலில் விளையாட இருந்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் மாற்றப்பட்டார்.

பின்னர். 2013ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் முதன் முதலாக களமிறங்கிய ரோஹித் அந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.