டாக்கா: தாங்கள் இன அழிப்புக்கு உள்ளான இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில், வங்கதேசத்தில் 2,00,000 ரோஹிங்யா முஸ்லீம்கள் கலந்துகொண்ட பெரிய பேரணி நடத்தப்பட்டது.

ரோஹிங்யா முஸ்லீம்களை மீண்டும் அவர்களின் தாய்நாடான மியான்மருக்கே திருப்பி அனுப்பும் இரண்டாவது முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மியான்மரின் ரகினே மாகாணத்திலிருந்து சுமார் 7,40,000 ரோஹிங்யாக்கள் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கள் மீது ஏவப்பட்ட வன்முறையிலிருந்து தப்பி, தென்கிழக்கு வங்கதேசத்தில் அமைக்கப்பட்ட பெரிய அகதி முகாம்களுக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே, ஏற்கனவே மியான்மரிலிருந்து தப்பிவந்த 2,00,000 ரோஹிங்யாக்கள் அடைக்கலம் புகுந்திருந்தனர்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட முக்காடு அணிந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோர் ‘ரோஹிங்யாக்களை பாதுகாத்த கடவுள் மிகப்பெரியவர்’ என்ற கோஷங்களை எழுப்பினர். தங்களின் இந்த அனுசரிப்பை அவர்கள் இனஅழிப்பு நாளின் நினைவுகூறல் என்று குறிப்பிடுகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஒரு பிரபல பாடலின் வரிகளைப் பாடிக்கொண்டு அவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். ஆனால், ரோஹிங்யா முஸ்லீம்களின் கிளர்ச்சியை அடக்கவே நடவடிக்கை எடுத்ததாக மியான்மர் அரசு தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. ஆனால், இந்த விளக்கத்தை ஐ.நா. மன்றம் ஏற்காமல், சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளது.