திருவனந்தபுரம்: நடிகர் மாதவன் நடித்து வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் 90% பொய் என்றும் அப்துல் கலாமுக்கு  நம்பி நாராணயன் எந்தவொரு உதவியும் செய்யவில்லை என்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த  இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

 பொய் வழக்குகளால் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட “ராக்கெட்ரி – நம்பி விளைவு” என்ற படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடித்து இயக்கி உள்ளார்.  பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில், பொய் வழக்குகளால் நம்பி நாராயணன் அனுபவித்த இழப்புகள் மற்றும் அதிலிருந்து தான் நிரபராதி என அவர் சட்டப்போராட்டம் நடத்தி வென்றது வரையிலான பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த படம் ஜூலை 1ந்தேதி வெளியாகி,  பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக  இந்த திரைப்படம் தொடர்பாக ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மாதவன் பேசும்போது,  “அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறைதான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது” என்றார். இதில் மாதவன் கூறிய பஞ்சாங்கம் என்ற வார்த்தை கடுமையாக விமர்சனங்களை எழுப்பியது.

இந்த நிலையில்,  கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் சசிகுமரன், முத்துநாயகன், இவிஎஸ் நம்பூதிரி ஆகியோர் கூட்டாக செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது, மாதவன் நடிப்பில் வெளியாகி உள்ள  ராக்கெட்ரி திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களில்  90% தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியதுடன், அதில், அப்துல் கலாமின் தவறை நம்பி நாராயணன் சரி செய்ததாக கூறப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது என்று மறுப்பு தெரிவித்துடன்,  இந்தியாவுக்கு கிரையோஜெனிக் எஞ்சின் தாமதமாக கிடைத்ததற்கு நம்பி நாராயணனின் கைது காரணம் என்பதும் பொய்யான தகவல் என்று விளக்கம் அளித்ததுடன்,   கிரையோஜெனிக் எஞ்சினுக்கும்  நம்பி நாயாணனனுக்கு சம்பந்தமே இல்லை. அதனால், இந்த படத்தில் உள்ள பல தகவல்கள் பொய்யானவை என  இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் புகார் கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.