பெய்ஜிங்: கோரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீனாவில் விடுதிகளில் தங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரோபோ மூலம் உணவு வழங்கப்படுகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ தொடுகிறது. 2000க்கும் மேலானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ் சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. அதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பினால் உலக முழுவதும் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் சீனாவில் உள்ள ஹாங்சாகு பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வித்தியாசமான, பாதுகாப்பான முறையில் வழங்கப்படுகிறது.
அந்த ஓட்டலில் உள்ள பயணிகளுக்கு உணவு கொண்டு செல்லப்படுவதற்கு ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓட்டலில் 200க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் உவாங் நகரத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணித்தவர்கள். வைரஸ் பீதியாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் அவர்கள் 2 வாரங்களாக ஓட்டல் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. ஏதேனும் தேவைகள் இருப்பின், இணையம் வழியே தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ரோபோ ஒன்றை ஓட்டல் நிர்வாகம் பயன்படுத்துகிறது. மொத்தமுள்ள 16 மாடிகளுக்கும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு அறை வாசல் செல்லும் இந்த ரோபோ, உள்ளே இருப்பவர்களை அழைக்கிறது. உணவு தேவைப்படுவோர் அல்லது ஆர்டர் செய்தவர்கள் கதவை திறந்து தங்களது உணவை எடுத்துக் கொள்ளலாம்,
அதன்படி அறை கதவை திறப்பவர்கள் தேவையான உணவை பெற்றுக் கொள்கின்றனர். சீனாவில் மட்டும் 3 ஆயிரம் பேர் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.