வேலூர்; பிரபலமான வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் , ரூ. 8 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொள்ளையன் சிங்க முகமூடியுடன் கடைக்குள் உலாவிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் கிளை வேலூரில் அமைந்துள்ளது. வேலூர், தோட்டப்பாளையம் பகுதியிலிருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் நள்ளிரவில், சுவரைத் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ஊழியர்கள் நகைக்கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் வந்து கடையைதிறந்து பார்த்தபோது, கடையில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததுடன், கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருப்பதை கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளை நடைபெற்ற பகுதியை பார்வையிட்டனர். மேலும், சுவர் துளையைப் பார்வையிட்டு, மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும், அந்த பகுதியில் உள்ள மற்ற பல சிசிடிவி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
விசாரணையில், சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கடையின் தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் இருந்த நகைகளை அள்ளிச் சென்றதாக இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கடையில், இரவுநேரக் காவலர்களும் பணியில் இருந்ததால், நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலைக்குள் இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொள்ளையன் கடைக்குள் முகமூடி அணிந்துகொண்டு திரியும் காட்சி தொர்பான விடியோ வைரலாகி வருகிறது.