யாழ்ப்பாணம்:
இலங்கை வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில், ஈழத்தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கோரி சாலையோரத்திலேயே தங்கி போராடி வருகிறார்கள். நான்காவது நாளாக இந்தப்போராட்டம் தொடர்கிறது.
இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி தமிழ் இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. தங்களது கோரிக்கையை தொடர்ந்து அரசுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், போராட்டத்தில் குத்தினர் இந்த இளைஞர்கள்.
கடந்த திங்கட்கிழமை அன்று யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தங்களது போராட்டத்தை இந்த இளைஞர்கள் துவங்கினர். தற்போது நான்காவது நாளாக அங்கேயே போராடி வருகிறார்கள்.
சாலை ஓரத்திலேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து போராடுகிறார்கள். இரவில் அங்கேயே ஆளுக்கு சிறிது நேரம் உறங்குகிறார்கள்.
“கனவுகளுடன் படித்தோம் கண்ணீருடன் வாழ்கின்றோம்”, அரசியல் வாதிகளுக்கு கோட்டா, பட்டதாரிகளுக்கு றோட்டா..?” என்ற முழக்கங்களுடன் இவர்களது போராட்டம் தொடர்கிறது.
பகல் நேரத்தில் சுள்ளென்று அடிக்கும் வெயிலிலும் இரவில் படரும் கடும் படும் பனியிலும் சாலையிலேயே தங்கி தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் இந்த பட்டதாரி இளைஞர்கள்.