சென்னை: சென்னையில் குறிப்பிட்ட 776 இடங்களில் சாலையோர கடைகளுக்கு அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.
பல சாலைகளில், ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத வகையில், சாலையை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைக்கப்படுவதால் நோயாளிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், சாலையோர கடைகளுக்கு தனி இடத்தை சென்னை மாநகராட்சி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகுதியில் 776 இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளின் நலனைக் காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலையோரக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள தி.நகர், அண்ணாநகா், புரசை வாக்கம் மற்றும் முக்கிய பகுதிகளில் காலை முதல் நள்ளிரவு வரை அதிகளவில் சாலையோர கடைகள் செயல்படுகின்றன. இதனால், நடைபாதைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீா்வுகாண சென்னை மாநகராட்சி சமீபத்தில் சாலையோர வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முன்னதாக, மாநகரம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நகர விற்பனைக் குழு உறுப்பினர்களும் தேர்தல் மூலம் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னையில், 776 பகுதிகளை சாலையோர விற்பனை மண்டலங்களாகவும், 491 பகுதிகளை விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாகவும் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.
இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சி சாா்பில் இடங்களை ஒதுக்கி அந்த இடத்தில் சாலையோர கடைகள் அமைக்கும் முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சியில் சாலையோர கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. மகாகவி பாரதி நகா் மேற்கு அவென்யூ சாலை, எழும்பூா் பாந்தியன் சாலை, அம்பத்தூா் பூங்கா சாலை, பெசன்ட் நகா் இரண்டாவது அவென்யூ ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, தடை விதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 3 மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்கவும் ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, வட சென்னையில் மகாகவி பாரதி நகர், மத்திய சென்னையில் அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பார்க் சாலை, தென் சென்னையில் பெசன்ட் நகர் 2-வது நிழல் சாலை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளை மாதிரி வியாபார வளாகங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கடைக்கும் இடையே 5 அடி இடைவெளி இருக்கும். தற்போது கடைகள் அமைப்பதற்கான இடத்தில் வா்ணம் பூசும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாலையிலும் ஒருபுறம் விற்பனைக்கும் மறுபுறம் நடப்பதற்கும் அனுமதிக்கப்படும். சாலையோர கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட சாலைகளில் பிரத்யேக அறிவிப்பு பலகை வைக்கப்படும். பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத விற்பனையாளா்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்’ என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மகாகவி பாரதி நகரில் நடைபாதையை சமமாகப் பிரித்து, ஒரு பகுதியில் வியாபாரிகள் கடை வைக்கவும், ஒரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் வழிவகை செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அம்பத்தூர் பகுதியில் நடைபாதையில் கடை வைக்கும் பகுதிகள் வண்ணம் தீட்டப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, விற்பனை பகுதி, விற்பனைக்கு அனுமதி இல்லாத பகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது வருவாய்த் துறை சார்பில், 776 இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்கலாம் என்றும், 491 இடங்களில் சாலையோர வியாபாரத்துக்கு தடை விதிக்கலாம் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டது. இதை நகர விற்பனைக் குழு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.