புதுடெல்லி: இந்தியாவிலேயே கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அம்மருந்தை பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இது அதிகாரிகள் வட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பானதுதானே ஒழிய, மருந்தின் தரம் தொடர்பான அல்ல என்று பிரேசில் நாட்டின் சுகாதார ஒழுங்குமுறை ஏஜென்சி(ANVISA) தெரிவித்துள்ளது.

கடந்துசென்ற மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையான காலத்தில், ANVISA வின் பிரதிநிதிகள், ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வருகைபுரிந்து நேரடியாக பல விஷயங்களை ஆய்வு செய்தார்கள். அப்போது அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. அப்போது ANVISA தரப்பில், நுட்பமான தொழில்நுட்ப மற்றும் ஆவணப்படுத்தல் நடைமுறைகள் கோரப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரேசில் அரசாங்கம் ஏற்கனவே அளித்த 20 மில்லியன் டோஸ்களுக்கான ஆர்டர் இன்னும் அப்படியே இருக்கிறது. எனவே, பிரேசிலுடனான கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி தொடர்பாக எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.