சென்னை: கள ஆய்வுக்காக  இரண்டு நாள் பயணமாக  இன்று விருதுநகர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் திட்டப்பணிகள் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை நேரடியாக சென்று கள ஆய்வு செய்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவையில் களஆய்வு செய்த நிலையில், இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு பணமாகிறார். அதன்படி,  2 நாள் சுற்றுப்பயணமாக இன்று விருதுநகர் செல்கிறார்.

விருதுநகரில்  வட்டம்  வாரியாக சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.  இந்த ஆய்வின்போரது,  முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் இருந்து இன்று காலையில் விமானத்தில் செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின் 10.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை ஏர்போர்ட்டில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பினை திமுகவினர் அளிக்க உள்ளனர். மதுரையில் இருந்து காரில் விருதுநகர் செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு, சத்திரரெட்டியபட்டி விலக்கில் பிரமாண்ட வரவேற்பினை திமுகவினர் அளிக்கிறார்கள். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர். மாலை 5.30 மணிக்கு விருதுநகரில் வாகன பேரணி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. திறந்த வாகனத்தில் செல்லும் முதல்வர் முக ஸ்டாலின், பேரணியாக சென்று மக்களை சந்திக்க உள்ளார்.