ஆர்.கே. நகர் தேர்தல்.. டிசம்பர் 31-க்குள்!

டில்லி:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே.நகர் தேர்தல் காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அத்தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் இரு அணிகள், திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன.

அ.தி.மு.க.வின் எடப்பாடி அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள்.

இதற்கிடையே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

 

இந்த நிலையில் தொகுதியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.

 

அங்கு புழங்கிய பணம், அமைச்சர்  விஜய மூலமாக வந்ததாக தகவல் கிடைக்கவே, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை செய்தது. இதில் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ரூ.89 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் பல முக்கிய ஆவணங்களும் கிடைத்தன.

மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் தொடர்ந்து வந்தததால், தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்னர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் இன்று டில்லியில் கூடியது. கூட்டத்துக்குப் பிறகு,  இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 9-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் என்றும், குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி, வரும் திங்கள்கிழமை அன்று அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
RK Nagar polls ..before December 31!