சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்குவரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்தஆண்டு மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர். கே. நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் 12ம் தேதி
இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கிடையில் அதிமுக இரண்டாக உடைந்ததை தொடர்ந்து அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதையடுத்து, அதிமுக அம்மா அணி சார்பில் தினகரனும், பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினர். இவர்களுடன் தீபாவும் களத்தில் குதித்தார்.
இவர்களுக்கு எதிராக திமுக களத்தில் குதித்தது.
எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் டிடிவி தினகரன் அணியினர் பணத்தை வாரி இறைத்தனர். இதன் காரணமாக ஆர்.கே.நகர் மக்களுக்கு பணமழை பொழிந்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை காரணமாக, ஆங்காங்கே பண விநியோகம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக ஏராளமான புகார்கள் பதியப்பட்டன.
அதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், பணபட்டுவாடா குறித்த தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. மேலும், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதற்குரிய சூழ்நிலை தற்போது இல்லை என்றும்
அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம்ஜைதி தெரிவித்தார்.
ஆனால், அரசியல் சாசன விதிப்படி காலியாக உள்ள தொகுதிகளுக்க 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் தொகுதியில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படு கிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.