பீகார் ராஜ்யசபா தேர்தலில் திருப்பம் : பஸ்வான் மனைவியை களமிறக்க லாலு கட்சி திட்டம்….

Must read

 

பாட்னா :

பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது மரணம் அடைந்தார்.

அவர் பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி.) தேர்வு பட்டிருந்தார்.

பஸ்வான் மரணம் அடைந்ததால் காலியாக உள்ள அந்த இடத்துக்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்ய அடுத்த மாதம் 14 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் பஸ்வான் மனைவி ரீனாவை நிறுத்த அந்த கட்சி முடிவு செய்தது.

பஸ்வான் மகன் சிராக், சட்டப்பேரவை தேர்தலின் போது, தனித்து நின்று முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை பல இடங்களில் பறித்தார்.

இதனால் சிராக்கின் தாயார் ரீனாவை ஆதரிக்க நிதீஷ் மறுத்துள்ள நிலையில், பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடியை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. பீகாரில் புதிய அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஆர்.ஜே.டி.யின் ஆட்கள், சிராக் பஸ்வானை சந்தித்து, “உங்கள் தாயார் ரீனா ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம்” என உறுதி மொழி அளித்துள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு, ஏற்கனவே நிதீஷை பகைத்துள்ள நிலையில், பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டு, பிரதமர் மோடியிடமும் விரோதம் சம்பாதித்து விடக்கூடாது என சிராக் யோசிக்கிறார்.

பஸ்வான் மனைவி போட்டியிடாத பட்சத்தில், தானே வேட்பாளரை நிறுத்த ஆர்.ஜே.டி. திட்டமிட்டுள்ளது.

பீகாரில் ஆளும் கட்சி கூட்டணியிடம் 125 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணிக்கு 110 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இருவரையும் ஆதரிக்காத ஒவைசியின் முஸ்லிம் கட்சி 5 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளது. சிராக் கைவசம் ஒரு எம்.எல்.ஏ. இருக்கிறார்.

பா.ஜ.கவை எதிர்த்து லாலு கட்சி போட்டியிடும் பட்சத்தில், களத்தில் சூடு பறக்கும்.

பா.ஜ.க. அணியில் இருந்து ஓரிரு எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தால், மத்திய அமைச்சர் கனவுடன் போட்டியிடும் சுஷில் மோடிக்கு நிலைமை சிக்கலாகி விடும்.

– பா. பாரதி

More articles

Latest article