டில்லி:

வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு நடந்தால் ரத்தஆறு ஓடும் என்று  பாஜக முன்னாள் கூட்டணி கட்சியும், தற்போது லாலு கட்சியுடன் கூட்டணியில் உள்ள ராஷ்டீரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக வாக்குப்பதிவு முடிவடைந்ததும் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில், பாஜகவே வெற்றி பெறும் என பெரும்பாலான முடிவு கள் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கையின்போது தில்லு முல்லுக்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில்முறையிட்டுள்ளன.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டீரிய லோக் சமதா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான உபேந்திர குஷ்வகா,  தேர்தல் கருத்து கணிப்பு என்ற பெயரில் பாரதிய ஜனதா மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான எண்ணத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது என்றும்,  பாரதிய ஜனதா அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா   மக்கள் மனநிலையை மாற்றும் விளையாட்டுகளை கையாளும் என்பது எங்களுக்கு தெரியும் என்றவர்,  மக்களின் உரிமையை பறிக்கும் செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் தொண்டர்கள் ஓட்டு எந்திரத்தில் மோசடி நடக்காமல் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று எச்சரித்தவர், வாக்கு எண்ணிக்கையின்போது, எங்கள் கட்சி தொண்டர்கள் உரிய ஆயுதங்களை கையில் ஏந்தி செல்வார்கள்.  வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு நடந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உபேந்திர குஷ்வகாவின் கட்சி கடந்த தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. இதன் காரணமாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.  கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பாஜகமீது குற்றம் சாட்டி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்த உபேந்திர குஷ்வகா தற்போது, பீகாரில் காங்கிரஸ் – லாலு கட்சி கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.