மும்பை:
நதிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விளம்பர வீடியோவில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் தனது மனைவியுடன் நடனம் ஆடியுள்ளார்.
இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் மழையின் அளவு குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதுபோல மகாராஷ்டி ராவிலும் மழையின் அளவு குறைந்து குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மும்பையை சுற்றி உள்ள பல நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், முக்கியமாக மும்பைக்கு தண்ணீர் வழங்கி வந்த மிதி, பாய்சர் தகிசார், ஓசிவாரா போன்ற நதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், தண்ணீரை சேமிக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநில அரசு, நதிகள் விழிப்புணர்வு பிரசார வீடியோ தனியார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் நதிகள் குறித்த விழிப்புணர்வு பாடலுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகிய இருவரும் இணைந்து நடனமாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர்களுடன், நிதி மந்திரி சுதிர்முகந்திவார், மும்பை மாநகராட்சி தலைவர் அஜாய் மேத்தா, போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல் சிகர் ஆகியோரும் விழிப்புணர்வு பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வீடியோ மும்பையில் வெளியாகியுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின்,
இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்ததற்காக மாநில முதல்வர் மற்றும் அமைச்சளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், இதில் நடித்தற்காக அமைச்சர் உள்பட அதிகாரிகள் சம்பளம் பெற்று உள்ளார்கள். அவர்களுக்கு இந்த தொகையை வழங்கியது யார்? என விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த விழிப்புணர்வு வீடியோவை தனியார் தயாரித்து இருந்தால் அதில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் நடித்தது ஏன்? அவர்களை நடிக்க ஒப்பந்தம் செய்தது யார்? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
மாநில முதல்வர் ஒருவரே மனைவியுடன் இணைந்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடனமாடும் வீடியோ வெளியிடப்பட்டிருப்பது இந்தியாவில் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.