சென்னை,
நதி நீர் இணைப்பில் கவனம் செலுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டுவதால் தமிழகம் மோசமாக பாதிக்கப்படுவதாக அதில் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நதிநீர் பிரச்னையால் தமிழகம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், அண்டை மாநிலங்களால் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாலும், அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரத்தினாலும் தமிழகம் தண்ணீர் இல்லாமல் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, 2007-ம் ஆண்டு நடந்த தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், விவசாயத்தைக் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே நதிநீர் இணைப்புத் திட்டத்தில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.