Rising Pune Supergiant bowlers defend 161 to stun Royal Challengers Bangalore​

 

பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியில் புனே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி 4 ஆவது முறையாக தோற்றது.

 

 

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. பெங்களூரு அணியில் தொடர்ந்து சொதப்பும் கெய்ல் மற்றும் மில்ஸுக்கு பதிலாக ஷேன் வாட்சன், ஆடம் மில்னே சேர்க்கப்பட்டிருந்தனர். ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ராகுல் திரிபாதியும், ரஹானேவும் புனே அணியின் இன்னிங்சை தொடங்கினர். ரஹானே 30 ரன்களிலும் (25 பந்து), திரிபாதி 31 ரன்களிலும் (23 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்க, பின்னர் கேப்டன் சுமித்தும், டோனியும் இணைந்தனர். பொறுமையாக ஆடிய இந்த ஜோடி, ரசிகர்களின் பொறுமையையும் சோதித்தது. டோனி அடித்த ஒரு இமாலய சிக்சர், ஸ்டேடியத்தின் மேற்கூரையில் தஞ்சமடைந்தது. அந்தப் பந்தை எடுக்க முடியாததால் வேறு பந்து பயன்படுத்தப்பட்டது. அணியின் ஸ்கோர் 127 ரன்களாக உயர்ந்த போது டோனி (28 ரன், 25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வாட்சனின் பந்து வீச்சில் போல்டானார். சுமித் 27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, கடைசி கட்டத்தில் கைகொடுத்தார் மனோஜ் திவாரி. அவர் 27 ரன்கள் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 20 ஓவர் முடிவில் புனே 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.

 

 

அடுத்து ஆடிய பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் 29 ரன்களும், கேப்டன் விராட் கோலி 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜாதவ் 18 ரன், வாட்சன் 14 ரன், பின்னி 18 ரன், நேகி 10 ரன் என நடையை கட்ட பெங்களூர் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 27 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி 2–வது வெற்றியை பெற்றது. புனே தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ‌ஷர்துல் தாகுர் தலா 3 விக்கெட்டுகளும், உனட்கட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 5வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூருக்கு இது நான்காவது தோல்வி.