இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் முன்னிலை பெற்றுள்ளார்.
முதல் சுற்று வாக்குப்பதிவில் அவருக்கு 88 வாக்குகள் கிடைத்து முன்னணியில் உள்ளார், இவருக்கு அடுத்தபடியாக வர்த்தக துறை அமைச்சர் பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளை பெற்றுள்ளார்.
ரிஷி சுனாக், பென்னி மோர்டான்ட், லிஸ் டிரஸ், கெமி படேனோக், டாம் துகென்தாட், சுயெல்லா பிரேவர்மேன், நாதிம் ஜஹாவி, ஜெர்மி ஹன்ட் ஆகியோர் பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 358 எம்.பி.க்களில் 357 பேர் இன்று நடந்த முதல் சுற்றில் வாக்களித்தனர் இதில் 30 க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு உள்ளவர்கள் அடுத்த சுற்று தேர்தலுக்கு தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
நாதிம் ஜஹாவி, ஜெர்மி ஹன்ட் ஆகிய இருவரும் 30 க்கும் குறைவான எம்.பி.க்களின் ஆதரவை பெற்றதால் இவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
நாளை இரண்டாவது சுற்றும் 18 ம் தேதி மூன்றாவது சுற்றும் நடைபெறும் நிலையில் 21 ம் தேதி பிரதமர் பதவிக்கு போட்டியிட தகுதியான இரண்டு நபர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
அந்த இருவரில் நாடு முழுவதும் உள்ள சுமார் 1,60,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் அதிகபட்ச உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவரே தலைவராகவும் பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.
பிரதமராக தேர்வானவர் குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் 5 ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் சுற்றில் 67 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள பென்னி மோர்டான்ட்க்கு கட்சி உறுப்பினர்களிடையே அமோக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.
தற்போது முதல் சுற்றில் முன்னணியில் உள்ள ரிஷி சுனாக் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதும் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பதும் கூடுதல் தகவல்.