மால்மோ :
தெற்கு சுவீடனில் உள்ள மால்மோ நகரில் வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமிய மதத்திற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் கலவரக்காரர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான ‘குரானை’ தீயிட்டு கொளுத்தினர்.
இந்த சம்பவத்தால், மால்மோ நகரில் கலவரம் வெடித்தது, பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன, போலீசார் மற்றும் மீட்புக் குழுவினரைத் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தீ வைப்புச் சம்பவங்கள் அரங்கேறின.
வலது சாரி அரசியல் தலைவரான டென்மார்கைச் சேர்ந்த ரஸ்முஸ் பவுல்டன், கடந்த சில ஆண்டுகளாக ஸ்வீடன் உள்ளிட்ட நார்டிக் நாடுகளில் இஸ்லாம் மதத்திற்கு எதிரான பிரச்சாரத்திலும் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
வெள்ளியன்று ஸ்வீடெனில் இதுபோன்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவரை அந்நாட்டுப் போலீசார் கைது செய்ததோடு, ஸ்வீடெனில் நுழைய இரண்டு ஆண்டுகள் தடைவிதித்து அவரை வெளியேற்றினர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அவரின் ஆதரவாளர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்தரப்பினர் போராட்டத்தில் இறங்கியதால் போராட்டம் கலவரமானது.
“வலதுசாரி தீவிரவாதிகள் குரானை எரித்ததை வன்மையாகக் கண்டித்த” ஐக்கிய நாடுகள் சபையின் நாகரிக கூட்டணி பிரிவின் தலைவர் மிகுவல் மொராட்டினோஸ் “இந்த சம்பவம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வெறுக்கத்தக்கது” என்று கூறினார்.
மத நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை கண்டிக்க அனைத்து மதங்களின் மதத் தலைவர்களுக்கும் மிகுவல் மொராட்டினோஸ் அழைப்பு விடுத்தார், மேலும், “வெறுக்கத்தக்க செயல்களால் நிகழ்த்தப்படும் இத்தகைய இழிவான செயல்கள் … தீவிரவாத குழுக்கள் இடையே வன்முறையைத் தூண்டுகின்றன,” என்றவர் “இது ஐ.நா. உள்ளிட்ட மற்ற மத நில்லிணக்க அமைப்புகளை அவமதிக்கும் செயலாகும்” என்று கூறினார்.