பற்றி எரியும் ஊரில் பெட்ரோல் ஊற்றிய படுபாதகர்கள்..
கொரோனாவால் நாடே பற்றி எரிந்தாலும், எரிமலை வெடித்த தகிப்பை உண்டாக்கியுள்ள மாநிலம், மகாராஷ்டிரா.
அங்கு கொரோனா இதுவரை 187 பேரின் உயிரைக் குடித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான வெளியூர் தொழிலாளர்கள் மும்பை குடிசைகளில் பசி-பட்டினியோடு முடங்கிக் கிடக்கிறார்கள்.
‘’உணவு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பு ‘’ என்பது அவர்களின் ஒரே, கோரிக்கை.
ஆனால் பக்கத்துத் தெருவுக்குள் கூட நகர விடாமல் காவல் காக்கிறது, போலீஸ்.
இந்த நிலையில் செய்திகளை மட்டும் தரும் தொலைக்காட்சியில் பணிபுரியும் ராகுல் என்ற நிருபர், சமுக வலைத்தளங்களில் ஒரு செய்தியைப் பரப்பினார்.
‘’ ஏப்ரல் 14 ஆம் தேதி( செவ்வாய்க்கிழமை) பாந்தரா ரயில்வே நிலையத்தில் இருந்து நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. உ.பி., பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்குச் செல்வோர் இந்த ரயில்களில் பயணம் செய்யலாம்’’ என்பதே அந்த செய்தி.
ஒரு உள்ளூர் அரசியல்வாதியும் இது போன்ற வதந்தியைப் பரப்பியுள்ளார்.
இதனை நம்பி ஆயிரக்கணக்கான வெளியூர் தொழிலாளர்கள், பாந்தரா ரயில் நிலையத்தில் குவிய-
போலீஸ் தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.
பொய்ச்செய்தி பரப்பிய நிருபர் மற்றும் அரசியல் வாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொறுப்புடன் செயல்பட வேண்டிய செய்தியாளரே- பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது, ஊடக வர்க்கத்தைத் தலை குனிய வைத்துள்ளது என்பதே உண்மை.
– எழுமலை வெங்கடேசன்