சென்னை: தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் அமைத்தும், மற்றும், RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமபுரங்களில் பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப் புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு அமைத்துள்ள குழு ஆலோசனை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் தலைவராக செயல்படுவார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும், 9 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். மாவட்ட வாரியாக திட்டத்தை செயல்படுத்த ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கி, அதன் நிலை குறித்து கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், உலகிலேயே முன்மாதிரியாக மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, உலக வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் ’Rights’ திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுபடாமல் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ரூ.1702 கோடியில் RIGHTS திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது. உலகவங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆலோசகர்களை நியமிக்க நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.