‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது..
2009 ம் ஆண்டு இதே நாளில் அமலுக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம் மூலம் இந்திய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா என்பது தற்போது வரை விவாத பொருளாகவே உள்ளது.
13 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் சேர்ந்து பயில வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்தச் சட்டம்.
மத்திய அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை, பாட புத்தகம் வாங்க தேவையான மானியமும் வழங்கப்பட்டது.
2014 க்குப் பின் இந்த உரிமையை பறிக்க தேவையான நடவடிக்கைகள் தான் அதிகளவில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நிதி சுமையை காரணம் காட்டி சீருடை, பாடப் புத்தகங்களுக்கான மானியம் முதலில் நிறுத்தப்பட்டது.
கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் பாரபட்சம் பார்க்கும் மனநிலை அதிகரித்துள்ளதை எட்டாம் வகுப்பிற்குப் பின் இடைநிற்றல் அதிகரித்திருப்பதன் மூலம் உணர முடியும்.
தவிர, ஆர்.டி.இ. சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆன பின்னும் உயர் கல்வி வரை கல்வியில் உரிமை வழங்க சட்டத்தில் வகைசெய்ய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக உயர்கல்விக்கு தகுதித் தேர்வு என்ற தெளிவற்ற கொள்கையால் மாணவர்களின் உயிருடன் விளையாடும் போக்கு அதிகரித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கல்வி கிடைக்கவேண்டும் என்ற மனநிலை ஆர்.டி.இ. மூலம் ஒழிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதனை மேலும் அதிகரிக்கும் போக்கே உள்ளது.
ஆடை கட்டுப்பாடு என்ற பெயரில் இளம் மாணவர்கள் மத்தியில் கல்வி நிலையங்கள் மூலம் விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
கல்வி மறுக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக சொந்த நாட்டிலேயே மக்கள் புலம்பெயர வேண்டிய நிலை தொடர்கிறது.
அசாம், மணிப்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் வாழ்வதற்கே அச்சமான சூழலை உருவாக்கி கல்வி பற்றிய சிந்தனையே இல்லாதவர்களாக ஆக்கும் சித்தாந்தமே கடந்த பத்தாண்டுகளாக மேலோங்கியிருக்கிறது.
சமச்சீர் கல்வி மற்றும் உயர்கல்வி வரை இலவசம் வழங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் பிரிவினைவாதம் மூலம் பாகுபாட்டை ஏற்படுத்த கங்கனம் கட்டிக்கொண்டு நடையாய் நடக்கின்றனர்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு என்ன நோக்கத்திற்காக 2009ல் கல்வி உரிமை சட்டம் கொண்டு வந்ததோ அந்த நோக்கம் நிறைவேற மக்கள் விழிப்புடன் கடமையாற்ற வேண்டிய காலம் மட்டுமல்ல தங்கள் எதிர்கால சந்ததியினர் அனைவருக்கும் உயர்கல்வி வரை கல்வியில் உரிமை கிடைத்திட உறுதியேற்க வேண்டிய தருணம் இது.