சென்னை: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7வது முறையாக ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டே உள்ளன.
இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால், பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவுக்குப் பதிலாக, அதில் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு போன்ற உலர் உணவு பொருள்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் வரை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்படாத நிலையில், பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கவும், இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத் திட்டத்தை தொடரவும் தமிழகஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 42.61 லட்சம் பள்ளி மாணவ–மாணவிகள் பயன்பெறுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.