டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாட்டில், மத்தியஅரசிடம் இருந்து  4வது தவணையாக ரூ.183.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்து உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு இதுவரை ரூ.734.67 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு.

15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17 மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தின் நான்காம் தவணையாக ரூ.9,871 கோடியை மத்திய அரசுவழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.39,484 கோடி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு வரும் பொதுமுடக்கம் காரணமாக மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருகின்றன. கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மத்திய, மாநில அரசுகளின் வரிவருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான செலவுகள் அதிகரித்து வந்தன.  இதையடுத்து, மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க, மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசுக்கு 15வது நிதிக் குழு பரிந்துரைத்தது.

அதன்படி,  2021-22 நிதி ஆண்டில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான வருவாய் பகிர்வுக்குப் பின்னும் வருவாய் பற்றாக்குறைக்கு உள்ளாகும் 17 மாநிலங்களுக்கு மானியமாக ரூ.1,18,452 கோடி வழங்க 15வது நிதிக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அரசியல் சாசன சட்டத்தின்275வது பிரிவின் கீழ், வருவாய் பற்றாக்குறைக்கு உள்ளாகும் மாநிலங்களுக்கு இந்த மானியத்தை 12 மாத தவணைகளாக வழங்க நிதிக் குழு பரிந்துரைத்தது.

அதன்படி, தமிழ்நாடு உள்பட  17 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறை மானியம் பெற தகுதியுள்ள மாநிலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 தவணையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,  தற்போது,  4-வது தவணையாக  17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடி நிதியைப் பகிர்ந்து வழங்கியுள்ளது.  இதுவரை வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக மொத்த ஒதுக்கீட்டில் 33.33 சதவீதம் அதாவது ரூ.39,484 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.