சென்னை

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா மூன்றாம் அலை விரைவில் பரவும் என்னும் அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.   இதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

இந்த தொகுப்பில் இருந்து தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைக்காததால் சென்னை நகரில் கடந்த 5, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டன.   மீண்டும் தடுப்பூசி கிடைத்ததால் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டன.  இதனால் தடுப்பூசி மருந்துகள் நேற்றே தீர்ந்து விட்டன.

எனவே இன்று சென்னையில் அனைத்து தடுப்பூசி முகாம்களும் இயங்காது என மாநகராட்சி  அறிவித்துள்ளது,   இதைப் போன்று மாநிலத்தின் பல பகுதிகளில் முகாம்கள் செயல்படாததால் மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.   டில்லி சென்றுள்ள தமிழக மருத்துவ செயலர் ராதாகிருஷ்ணன் இது குறித்து அதிகாரிகளை நேரில் சந்திக்க உள்ளார்.