டில்லி:
‘‘எனது மகன் பெயரில் வெளியிடப்படாத சொத்துக்கள் இருப்பது உண்மை என்றால் அதன் விபரங்களை சிபிஐ வெளியிட வேண்டும்’’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘ ஏன் சிபிஐ எனது திறந்த சவாலை ஏற்று வெளியிடப்படாத சொத்துக்களின் விபரங்களை வெளியிடவில்லை. ஆதாரங்கள் ஏதும் இருந்தால் அவற்றை சிபிஐ வெளியிட வேண்டும். எனது மகனை குறி வைத்து சிபிஐ செயல்படுகிறது’’ என்றார்.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றால் அங்குள்ள அவரது பல வங்கி கணக்குகளை அவர் மூடித்துவிடுவார் என்று சிபிஐ தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிதம்பரம் மேலும் கூறுகையில், ‘‘வெளிநாட்டு வங்கிகளில் கார்த்திக்கிற்கு கண க்கு இருக்கிறது என்பது பொய். பொய் ஒரு போதும் உண்மையாகிவிடாது. வெளியிடப்படாத சொத்துக்கள் எனது பெயரிலோ அல்லது எனது குடும்பத்தார் பெயரிலோ இருப்பதற்கான ஆவணங்களை காண்பித்துவிட்டால் அவற்றை அரசுக்கு மாற்றி கொடுத்துவிடுகிறோம். அதன் பிறகு அரசு அவற்றுக்கு உரிமையாளராக இருந்து கொள்ளலாம்’’ என்றார்.
முன்னதாக கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை சிபிஐ வெளியிட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளுக்கு செல்வதையும் தடுக்க வேணடும். அவ்வாறு சென்றால் அங்குள்ள வங்கி கணக்குகளை முடித்துவிடுவார் என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
கார்த்தி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்டதன் மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவந்துள்ளது. விரைவில் அவை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.