ஐதராபாத்
தெலுகு தேசத்தில் இருந்து விலகிய ரேவந்த் ரெட்டி காங்கிரசில் இணைகிறார்.
தெலுங்கானா மாநில தெலுகு தேசம் கட்சியின் தலைவர்களில் ஒருவர் ரேவந்த் ரெட்டி. இவர் கடந்த சில நாட்களாகவே ஆந்திரப் பிரதேச தெலுகு தேசம் கட்சியினரைப் பற்றி புகார்களை தெரிவித்து வந்தார். அமைச்சரவையில் உள்ள இரு அமைச்சர்கள் தெலுங்கானா அரசிடமிருந்து காண்டிராக்ட் பெற்ற வகையில் பெரும் பண மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்த புகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் கோடங்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை அன்று தெலுகு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை சந்திரபாபு நாயுடுவின் காரியதரிசியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக செய்தி வந்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தெலுங்கானா மாநில பொருப்பாளர் குந்தியா இந்த தகவலை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர், “ரேவந்த் ரெட்டி வரும் அக்டோபர் 31ஆம் தேதி அன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய உள்ளார். இது குறித்த பேச்சு வார்த்தைகளை ஏற்கனவே அவர் நிகழ்த்தி விட்டார். அவர் ஒரு மதிப்புக்குரிய தலைவர். அவரை வரவேற்பதில் காங்கிரஸ் மகிழ்ச்சி அடைகிறது. இது வரை அவருக்கு கட்சிப் பதவிகள் வழங்குவது பற்றி எதுவும் முடிவு செய்யவில்லை. அவருடன் மேலும் பலரும் கட்சியில் இணைய உள்ளனர். சுமார் 130க்கும் மேலான வரலாற்றுச் சிறப்பு மிக்க காங்கிரசில் யார் இணைந்தாலும் வரவேற்க தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ரேவந்த் ரெட்டி, கடந்த 2015ஆம் வருடம் மேல்சபை தேர்தலுக்கு வாக்களிக்க சட்டசபை உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்த போது வீடியோ பதிவில் சிக்கியதும் அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.