யாங்கூன்
ராய்ட்டர் செய்தி நிறுவன பத்திரிகையாளர்கள் இருவர் 500 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யபட்டுள்ளனர்.
மியான்மரை சேர்ந்த கியாவ் சூ ஊ மற்றும் வ லூன் ஆகிய இருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் ஆவார்கள். இவர்கள் இருவர் மீதும் அந்நாட்டின் அதிகார ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை ஒட்டி கடந்த செப்டம்பர் மாதம் இருவருக்கும் 7 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மனித உரிமை ஆர்வலர்கள் இந்த தண்டனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இவர்கள் பணி புரியும் ராய்ட்டர் செய்தி நிறுவனமும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அனைவரும் இந்த இரு பத்திரிகையாளர்களை விடுவிக்க பல விதங்களில் முயற்சி செய்து வந்தனர். இந்த தண்டனை மூலம் பத்திரிகை சுதந்திரம் பறிபோவதாக இந்த இரு செய்தியாளர்களுக்கு மக்களில் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மியான்மர் புது வருடப் பிறப்பாகும். ஒவ்வொரு வருடமும் இந்த வருடப் பிறப்பை முன்னிட்டு நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை அரசு விடுவிப்பது வழக்கமாகும். மியான்மர் அதிபர் வின் மிண்ட் இந்த வருடமும் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளில் 6200 பேரில் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ராய்ட்டர் செய்தியாளர்களான கியாவ் சூ ஊ மற்றும் வ லூன் ஆகிய இருவரும் அடங்குவார்கள். இதை ஒட்டி 500 நாட்கள் சிறை வாசத்தை முடித்துக் கொண்டு இருவரும் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். மக்களில் பலர் இருவருக்கும் ஆதரவு தெரிவித்ததால் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.