மெல்போர்ன்: டெஸ்ட் தொடரில், முதல் போட்டியுடன் கேப்டன் விராத் கோலி நாடு திரும்புவது, சிறிய வேறுபாட்டை ஏற்படுத்தும் என்பது உண்மையெனினும், அதுவே தீர்மானகரமான காரணியாக இருக்கும் என்று தான் நம்பவில்லை என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் துணை கேப்டன் பேட் கம்மின்ஸ்.
இந்திய கேப்டனது வீடு திரும்புதலை ஆஸ்திரேலிய அணி பெரிய விஷயமாக பார்க்கவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“உண்மையாக சொல்ல வேண்டுமெனில், விராத் கோலி போட்டியை தவறவிடுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை, அணிக்கு வெளியே வாய்ப்பு கிடைக்குமா? என்று எப்போதுமே ஒரு சிறந்த பேட்ஸ்மேன் காத்துக் கொண்டிருப்பார்.
எனவே, கோலியின் வீடு திரும்புதல், ஒரு பதிய பேட்ஸ்மேனுக்கான கேரியர் தொடக்கமாகவும் இருக்கலாம். கோலி வீடு திரும்புவது சில வேறுபாடுகளை ஏற்படுத்தலாம். ஆனால், அதுவே தீர்மானகரமான முடிவை அளித்துவிடும் என்று நான் நம்பவில்லை.
ஆஸ்திரேலிய அணியினராகிய நாங்கள், கோலியின் நாடு திரும்பல் குறித்து அதிகம் பேசவில்லை என்பதுதான் உண்மை. கடந்தமுறை இந்திய அணி இங்கே சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மை” என்றுள்ளார் கம்மின்ஸ்.