சேலம்: சசிகலா வருகை – வரவேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.வெற்றிக்காக 3விரலை வெட்டிய சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டு போஸ்டருடன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா தமிழகம் வருகையை, அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமாக வரவேற்பு கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். சிறை தண்டனை பெற்ற ஒரு குற்றவாளிக்கு இவ்வளவு ஆடம்பரமான வரவேற்பு தேவையா, கொள்ளையடித்து சம்பாதித்த மக்கள் பணத்தை தண்ணீராக வீணடிக்கிறார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சசிகலாவுக்கு அளிக்கப்படும் வரவேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரும், அதிமுக தேர்தல் வெற்றிக்காக தனது கைவிரல்கள் மூன்றை வெட்டிக் கொண்டவருமான, சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு ரத்தினம், சுவரொட்டியுடன் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அவரது எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்ட காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் ரத்தினம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றி பெற கோயிலுக்குச் சென்று தனது கையின் 3 விரல்களை வெட்டி காணிக்கை செலுத்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் தற்போது, பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், சசிகலா வருகைக்கு கொடுக்கும் வரவேற்பை கண்டு கொந்தளித்து, தனது ஆதங்கத்தை போஸ்டர் மூலம் தெரிவித்தார். சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே எம்ஜிஆர் வேடம் அணிந்து கையில் சசிகலா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுவரொட்டியுடன் நீண்ட நேரம் நின்று மக்களின் கவனத்தை ஈர்த்தார். ரத்தினத்தின் வித்தியாசனமான எதிர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.