சென்னை: நெல்லையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நெல்லை டவுன் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான ஜாகீா் உசேன் பிஜிலிக்கும், முகமது தௌபிக் என்ற கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் 18 ஆம் தேதி காலை தொழுகையை முடித்துவிட்டுச் சென்ற பிஜிலி ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்க தவறியதால், இக்கொலை நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. திருநெல்வேலி நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், நகர முன்னாள் உதவி ஆணையா் செந்தில் குமாா் ஆகியோா் சரியாக நடவடிக்கை எடுக்காததே இநத் கொலைக்கு காரணம் என அவரது உறவினா்கள் குற்றம்சாட்டியிருந்தனா். மேலும், உதவி ஆணையா், காவல் ஆய்வாளா் மீது குற்றம்சாட்டி ஜாகீா் உசேன் பிஜிலி வெளியிட்ட விடியோ பதிவும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இது தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர், கொலை தொடா்பாக திருநெல்வேலி நகரம் தொட்டிபாலத் தெருவைச் சோ்ந்த மகபூப்ஜான் மகன் பீா்முஹமது (37) என்பவரைகைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் மற்றொரு குற்றவாளியான தௌபிக்கின் மனைவி நூா்நிஷாவை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீா் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.