டில்லி

ரசின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் 49 பேர் தற்போதைய அரசின் நிலை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

சமீபத்தில் கத்துவா மற்றும் உன்னாவ் பலாத்கார நிகழ்வுகள் நாட்டை உலுக்கி உள்ளன.    பொதுமக்களில் பலர் தெர்வுஇல் இறங்கி தங்கள் எதிர்ப்பை காட்ட தொடங்கி உள்ளனர்.   கத்துவா பகுதியில் ஒரு சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்கள் தடுத்து போராடி உள்ளனர்.    உன்னாவ் சட்டமன்ற உறுப்பினரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உ.பி.  முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வால் அரசின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   அவர்கள் சார்பாக 49 பேர் இணைந்து பிரத்மர் மோடிக்கு கண்டனக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.    நாடெங்கும் உள்ள பல மாநிலங்களின் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி உள்ளனர்.

அவர்கள் தங்கள் கடிதத்தில், “கத்துவா பகுதியில் இஸ்லாமிய நாடோடி வகுப்பில் பிறந்த 8 வயது சிறுமி கடத்தப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின் கொலை செய்யப்பட்டுள்ளார்.   அந்த நாடோடி மக்களை அங்கிருந்து பயமுறுத்தி விரட்டவே இவ்வாறு செய்யப்பட்டது என குற்றவாளிகள் பகிரங்கமாக கூறுகின்றனர்.

அதே போல உத்திரப் பிரதேச உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒரு 16 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.    அவர் மீதும் அவர் சகோதரர் மீதும் அந்த பெண் கொடுத்த புகார்கள் ஏற்கப்படவில்லை.  நீதி கிடைக்காத அந்தப் பெண் முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.   அதற்கு அடுத்த நாள் அந்தப் பெண்ணின் தந்தை மரணம் அடைந்துள்ளார்.

இந்த இரு நிகழ்வுகளும் நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி அமைக்கத் தக்கவை.  இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.    இது போல நிகழ்வுகள் நாட்டை இருளில் ஆழ்த்துகின்றன.   இந்நேரத்தில் அரசு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.    இந்த அரசு இனியாவது செயல்பட நாங்கள் ஐந்து நடவடிக்கைகளை பரிந்துரைக்கிரோம்.

இஸ்லாமியர்கள், தலித்துக்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகளில் இருந்து அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.   பிரதமர் நேரடியாக உன்னாவ் மற்றும் கத்துவா பகுதியில் பாதிக்கபட்ட குடும்பத்தை நேரில் சந்திக்க வேண்டும்.   அவர்களிடம் மன்னிப்பு கோரி அவர்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.   இது போல குற்றங்கள் மேலும் நிகழாத வண்ணம் தடுக்க ஆவன செய்ய வேண்டும்.   பலாத்கார குற்றவாளிகள் மீதான விசாரணையை துரிதப் படுத்தி அவர்களுக்கு விரைவில் தண்டனை அளிக்க வேண்டும்”  என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.