வுகாத்தி

சுமார் 30 வருடங்களுக்கு மேல் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியின் மீது சட்ட விரோதமாக குடியேறியவர் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக வங்க தேசத்தில் இருந்து குடியேறியவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.   வெளிநாட்டினர் சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்கும் 1964ஆம் சட்டப்படி இந்த வழக்குகள் தொடரப்படுகின்றன.   இந்த வழக்குகளின் முக்கிய குறிக்கோள் வங்கதேசத்திலிருந்து 1971ஆம் ஆண்டுக்குப் பின் குடியேறியவர்களை கண்டறிந்து திருப்பி அனுப்புவதே ஆகும்.

சுமார் 80000 வெளிநாட்டினர்  அசாமில் வசிப்பதாக  கண்டுபிடிக்கப்பட்டு அதில் 29000 பேர் அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.  இன்னும் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இது போல வழக்கு பதியப்பட்டுள்ளவர்களில் பல இந்திய அரசு ஊழியர்களும் அடங்குவார்கள்.   பல நேரங்களில் அவை தவரான வழ்க்காக இருந்துள்ளது.  அசாம் போலிசில் கான்ஸ்டேபிளாக பணி புரிந்து வந்த அபு தாகிர் அகமது மேல் இது போல புகார் எழுந்து அவர் தான் இந்தியர் என்பதை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது,

கவுகாத்தியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி முகமது அஜ்மல் ஹோக் (வயது 49).   இவர் மேல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறியவர் என்னும் சந்தேகத்தில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது .   அந்த நேரத்தில் அவர் தனது சொந்த ஊரான காலாகிகஷ் என்னும் கிராமத்தில் இருந்திருக்கிறார்.   கவுகாத்தியில் இருந்து சுமார் 70 கிமீ தூரத்தில் உள்ள ஒரு குக்கிராமம் அது.   நோட்டிசின்படி அவர் விசாரணைக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி வரவேண்டும்.    ஆனால்  அவருக்கு இந்த விவரம் தெரியாததால் வரவில்லை.   அவர் மேல் இப்போது சட்ட விரோதமாக குடியேறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஹோக் கின் தந்தை பெயர் 1966ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியிலில் உள்ளதும், அவர் தாயாரின் பெயர் 1951 ஆம் ஆண்டில் இருந்தே வாக்காளர் பட்டியிலில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.    ஏற்கனவே அவர் மனைவிமேல் பல வருடங்களுக்கு முன்பே வெளிநாட்டவர் என குற்றம் சாட்டப்பட்டு அவர் தான் இந்திய என்பதை நிருபித்து உள்ளார்.   ஹோக் 1986ஆம் வருடம் முதல் ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஹோக்,”என்னால் நான் இந்தியன் என நிரூபிக்க முடியும்.   ஆனால் எனது நாட்டிலேயே என்னை வெளிநாட்டவன் என வழக்கு தொடுத்துள்ளது மிகவும் சங்கடமாக உள்ளது.   எல்லாவற்றையும் விட எனது குழந்தைகள் என்னிடம் நமது அரசுக்கே நம் மீது நம்பிக்கை இல்லையா என கேட்பது மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது.   நான் இந்த நாட்டை சேர்ந்த ஒரு அசாமியன் என்பதை நிரூபிப்பேன்” என கண்ணீருடன் கூறி உள்ளார்.

ஹோக் மீதான மறு விசாரணை வரும் அக்டோபர் 13ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.