டெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் பணவீக்கம் 7.79% ஆக உயர்ந்துள்ளது. இது பொருளாதார நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79%-ஆக அதிகரித்துள்ளதாக  மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இது கடந்த  மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம்  0.84% உயர்ந்து 7.79% ஆக அதிகரித்துள்ளது

கடந்த 8ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண வீக்கம் ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்பு என்ன? 

பணவீக்கம் என்பது விலைவாசி உயர்வைக் குறிக்கும். பணவீக்கம் அதிகமாக இருந்தால் விலைவாசி உயர்வது, குறைவாக இருந்தால் விலைவாசி குறைவதும் யதார்த்தம்.

இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவில் பணவிக்கம் (Inflation) ஏறி இறங்கி காணப்படுகிறது. பல முறை அவை கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் கடந்த ஏப்ரல் மாத பணவீக்கம் கடந் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியஅரசு மீது கடுமையான அதிருப்தியில்  உள்ளனர். விலைவாசிகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பண வீக்கம் உயர்ந்துள்ளால், மேலும் விலைவாசி உயருமே என்ற அச்சம் எழுந்துள்ளது.

பொதுவாக மக்கள் அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள், எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலைகள் உயர்வதை விரும்புவது இல்லை. எந்த ஆட்சியில் விலைவாசி குறைகிறதோ அந்த ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று கூறி வருகின்றனர். ஆனால், பண வீக்கம் காரணமாக, விலைவாசிகள் உயர்ந்துகொண்டே சென்றால், அது மக்களுக்கு மட்டுமின்றி ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும்போது பணவீக்கம் ஒரு தெர்மா மீட்டர்போல என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  தற்போது இந்தியாவில் வருடாந்தர பணவீக்க விகிதம் அதிகரித்து வருவது, தொழில் உற்பத்தி, வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.