சென்னை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50000 க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தமிழகம் முழுவதும் 1650 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை காலை, மாலை, இரவு என தனித்தனியாக 550 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மேலும் தேவைக்கேற்ப பறக்கும் படைகளை அமைத்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு செயற்பொறியாளர், இரண்டு காவலர்கள், ஒரு வீடியோ பதிவு செய்பவர் என மொத்தம் 4 பேர் இருப்பார்கள். இவர்கள் மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள், மது, ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்வார்கள்.
நன்னடத்தை விதிகளின் படி ரொக்கமாக ரூ.50 ஆயிரம் தொகை வரை எடுத்து செல்லலாம். அதைப் போல் ரூ.10 ஆயிரம் மதிப்பு வரையிலான பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம். ஒருவர் ரூ.50,000க்கு மேல் எடுத்து சென்றால் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டவற்றைப் பறக்கும் படையினர் அரசுக் கருவூலத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.