சென்னை:
தமிழகத்தில் நடைபெற்ற நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுகவினர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, சட்டமன்ற சபாநாயகர் அறையில் முதல்வர் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.
இன்று தமிழகத்தில் முதன்முதலாக தமிழ்நாடு நாள் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டியும், இடைத்தேர்தலில் இரு அதிமுகவினர் வெற்றி பெற்றதையும்யொட்டியும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திலும் அவர்கள் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா நினைவிட பணிகளையும், எம்ஜிஆர் நினைவிட புதுப்பிப்பு பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கும், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கும் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124ஆக உயர்ந்தது
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.