பா.ஜ.க. தலைவரை சிவசேனா எம்.பி. சந்தித்தது ஏன்?
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ்- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான தேவேந்திர பட்நாவிசை, சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராத் நேற்று முன் தினம் சந்தித்துப் பேசினார்.
அரசியலில் எலியும்,பூனையுமாக இருக்கும் இரு தலைவர்களும் சந்தித்த நிகழ்வு மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவசேனாவுடன் இணைந்து பா.ஜ.க. செயல்படப் போவதாகச் செய்திகள் பரவிய நிலையில், அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார், பட்நாவிஸ்.
‘’சிவசேனாவுடன் பா.ஜ.க. இணைய உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல. மகாராஷ்டிர மாநில கூட்டணி அரசு தானாகவே கவிழும். நாங்கள் அதனைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
சிவசேனாவின் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’ வுக்கு பேட்டி எடுப்பதற்காக சஞ்சய் ராத், என்னைச் சந்தித்தார்’’ என்று கூறியுள்ளார், பட்நாவிஸ்.
இதே கருத்தை சஞ்சய் ராத்தும் தெரிவித்துள்ளார்.‘’ நாங்கள் அரசியல் பேசவில்லை. ’சாம்னா இதழ் பேட்டிக்காகவே பட்நாவிசை சந்தித்தேன்.இந்த சந்திப்பு குறித்து முதல்- அமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு முன் கூட்டியே தெரியும் ’’ என்று சஞ்சய் ராத் கூறினார்.
-பா.பாரதி.