*தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில், இன்று (19.09.2024) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு சூரஜ் எம்.என். ஹெக்டே மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : -*
தீர்மானம் :1
தலைவர் ராகுல்காந்தியை பழித்து பேசும் பா.ஜ.க.வினர்
கடந்த மக்களவை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக தலைவர் ராகுல்காந்தி செயல்பட ஆரம்பித்ததும் அதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் தொடர்ந்து தனிமனித தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மக்களவையில் தலைவர் ராகுல்காந்தி ஆற்றுகிற உரையில் உள்ள ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் சர்வாதிகாரமான முறையில் பல்வேறு உபாயங்களை கையாண்டு வருகின்றனர். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த எச். ராஜா, தலைவர் ராகுல்காந்தியை பழித்து பேசியதை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இத்தகைய தனிமனித தாக்குதல்களும், வெறுப்பு பேச்சுகளும் பா.ஜ.க.வினரின் பலகீன போக்கையே வெளிப்படுத்துகிறது.
தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நிகழ்த்துகிற ஜனநாயக கடமையை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவர்மீது இழிவான விமர்சனங்களை முன் வைப்பார்களேயானால், அதை காங்கிரஸ் கட்சியினர் தங்களது சக்தி முழுமையையும் பயன்படுத்தி முறியடிப்பார்கள் என்பதை இக்கூட்டம் நெஞ்சுறுதியுடன் பிரகடனம் செய்கிறது. பல்வேறு முனைகளில் சகிப்புத்தன்மை இல்லாத நிலையில் தலைவர் ராகுல்காந்தி மீது பா.ஜ.க.வினர் மேற்கொண்டு வரும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் தொழில் முனைவோரிடையே நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து பாரம்பரியமிக்க அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் திரு. சீனிவாசன் எழுப்பிய கேள்விகளை சகித்துக் கொள்ள முடியாமல் மிகுந்த ஆணவத்தோடு நடந்து கொண்டதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. ஒரு தொழில் முனைவோர், தமக்கு ஏற்படுகிற பாதிப்புகளை கூறும் போது தீர்வு காண முயல்வதற்கு பதிலாக தொழில் முனைவோரை பழிவாங்கும் நோக்கத்தோடு நிர்ப்பந்தப்படுத்தி நேரில் வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்த காட்சிகளை கண்டு தமிழ்நாடே கொதித்தெழுந்தது. இந்நிகழ்வின் மூலம் நிர்மலா சீதாராமனின் எதேச்சதிகாரமான அணுகுமுறை அம்பலமாகியுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இந்நிகழ்வுக்கு எதிராக உடனடியாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது.
முத்ரா கடன் திட்டமும், தவறான தகவல்களும்
கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 49.5 கோடி வங்கி கணக்குகளின் மூலமாக ரூபாய் 29.76 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 5.62 வங்கி கணக்குகளின் வாயிலாக ரூபாய் 3.06 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியல் வெளியிட்டிருக்கிறார். இந்த பட்டியலை அறிவித்ததும் அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் அனைவரும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்ததோடு, நிர்மலா சீதாராமனை பார்த்து எள்ளி நகையாடினார்கள்.
நிர்மலா சீதாராமன் கூற்றின்படி, முத்ரா கடன் வழங்கப்பட்டதா என்று ஆய்வு செய்கிற போது கடும் அதிர்ச்சிதான் வெளிப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிகையே 30 கோடி தான். ஆனால், 49.5 கோடி வங்கி கணக்குகளின் மூலமாக பயனாளிகளுக்கு கடன் வழங்கியிருப்பதாக கூறுவதை எவராலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி பேர் என்று வைத்துக் கொண்டால் அதில் 5.6 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறுவது, 35 லட்சம் பேர் வசிக்கும் கோவை மாவட்டத்தில் 20 லட்சம் முத்ரா கடன் வழங்கியதாக கூறுவதை விட ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.
முத்ரா கடன் வழங்கியது குறித்த புள்ளி விவர மோசடியை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த புள்ளி விபரம் உண்மையாக இருந்திருந்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஆதாரத்தோடு புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
எனவே, பா.ஜ.க.வினரின் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரங்களை, சமூக ஊடகங்களி;ன் மூலமாக காங்கிரஸ் கட்சியினர் முறியடிக்கிற வகையில் அவ்வப்போது பரப்புரையை மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் புறக்கணிப்பு
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக மாநில நலன்களும், உரிமைகளும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மொத்த நிதி ஒதுக்கீட்டில் உத்தரபிரதேசம் 18 சதவிகிதம், தமிழ்நாடு 4 சதவிகிதம், கர்நாடகம் 3 சதவிகிதம், தெலுங்கானா 2 சதவிகிதம், கேரளா 1 சதவிகிதம் என நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தென்மாநிலங்களை வஞ்சிக்கிற அணுகுமுறையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. உத்தரபிரதேசம் ஒன்றிய அரசு 1 ரூபாய் வழங்கினால் ரூபாய் 2.73 திரும்ப கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு 29 பைசா தான் திரும்ப கிடைக்கிறது. இத்தகைய பாரபட்ச போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
2024-25 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூபாய் 3586 கோடி நிதிநிலை அறிக்கையில் அறிக்கப்பட்டது. இந்த தொகையில் ஒன்றிய அரசின் 60 சதவிகித பங்களிப்பான ரூபாய் 2152 கோடியை ஜூன் மாதம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை விடுவிக்காததால் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் தமிழக கல்வித்துறை இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் கூறுவது கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதாக இக்கூட்டம் கருதுகிறது.
சமீபத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மொத்த நிதியில் 80 சதவிகித நிதி மராட்டியம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களின் ரயில்வே திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. சென்னை மாநகரில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூபாய் 63,246 கோடி. இதன் மொத்த சுமையையும் தமிழ்நாடே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நியாயப்படுத்தி பேசியது அவரது ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது. இதைப் போலவே தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் மோடி அரசு தமிழ்நாட்டை புறக்கணித்து வஞ்சித்து வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
சாதி வாரி கணக்கெடுப்பும் சமூக நீதியும்
கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூக நீதி நோக்கத்தை அடைய சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவும், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு விதித்துள்ள 50 சதவிகித வரம்பை தளர்த்தவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை வலியுறுத்துகிற வகையில் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாமல் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை அடைய முடியாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து ஒன்றிய அரசு தான் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிற ஒன்றிய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டுமென இக்கூட்டம் ஒன்றிய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறது.
தேசிய புதிய கல்விக் கொள்கை
ஒன்றிய பா.ஜ.க. அரசு 2020 இல் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாடு அரசுக்கென கல்விக் கொள்கையை வகுக்க நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்திற்கென கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அதே நேரத்தில் அரசமைப்புச் சட்டத்தில் பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தது முதற்கொண்டு, அதிகாரங்களை குவித்து தலைநகர் தில்லியில் அமர்ந்து கொண்டு இந்தியாவை ஆளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் பின்னணியில் எடுத்தது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அமைச்சரவையின் முடிவாகும். கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகம் செழுமைப்படுகிற வகையில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அமைதியான முறையில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மத நல்லிணக்கத்தோடு அரசமைப்புச் சட்டப்படி செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கிற வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகம் செய்திருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ மூன்றுக்கு இரண்டு என்கிற அளவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் வருகிற, குளிர்கால கூட்டத் தொடரில் இதை நிறைவேற்றுவோம் என்று பா.ஜ.க.வினர் கூறுவது பிரச்சினைகளை திசைத் திருப்புகிற செயலாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வாய்ப்பு இல்லாத நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முடிவு நடைமுறை சாத்தியம் இல்லாததாகும். ஒற்றை ஆட்சிக்கும், சர்வாதிகார செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கிற இந்த முயற்சியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக காங்கிரசின் எதிர்கால செயல்திட்டங்கள்
கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் பங்கேற்கிற இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியின் மூலம் தமிழக மக்களின் பேராதரவை பெற்று வருகிறோம். விரைவில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிகளை பெற்று, காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துகிற வகையில் இயக்கப் பணியாற்ற வேண்டுமென காங்கிரஸ் கட்சியினரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதன் மூலமே நமது எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க முடியும். இதற்கு காங்கிரஸ் கட்சியை வாக்குச்சாவடி அளவில் வலிமைப்படுத்துகிற முதன்மையான பணியை உடனடியாக தொடங்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கிறது என்கிற கருத்தை தமிழக அரசியல் களத்தில் உருவாக்குவதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு தலைவர் ராகுல்காந்தி கொள்கை ரீதியாக வழங்குகிற கருத்தியலை முன்னெடுத்துச் செல்கிற வகையில் தீவிர பரப்புரையை நாம் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பரப்பப்படுகிற அவதூறுகளை உடனுக்குடன் முறியடிக்கிற வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். நமது எதிரிகளை கருத்தியல் ரீதியாகத் தான் முறியடிக்க முடியும் என்கிற அடிப்படையில் நமது செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழக காங்கிரஸ் தமது எதிர்கால செயல்திட்டத்தை வகுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டுமென்ற முயற்சியில் தலைவர் ராஜிவ்காந்தி அவர்கள் 1987-89 களில் 13 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி நடைபெற்ற 1989 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 20 சதவிகித வாக்கு வங்கியையும், 26 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றது. தலைவர் ராஜிவ்காந்தியின் கனவின்படி மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பதே நமது நோக்கமாக இருக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு எப்பொழுது கிடைக்கிறதோ அப்பொழுது அந்த முயற்சியில் இறங்குவதற்கு முதலில் நம்மை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்கிற கனவு நிறைவேறுவதே நமது ஒரே நோக்கமாக இருக்க முடியும் என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இதற்கான செயல் திட்டத்தை வகுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணையிருப்போம் என இக்கூட்டம் உறுதி கூறுகிறது.
உதய்பூர் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவோம்
கடந்த 2022 மே மாதம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு (Chintan Shivir) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக காங்கிரசின் அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என இக்கூட்டம் முடிவெடுத்துள்ளது. அதன்படி அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதலோடு மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றியமைப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.
காந்தியடிகளின் பிறந்தநாளில் அனைத்து மாவட்டங்களிலும் பாத யாத்திரை
காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி மாவட்ட, வட்டார, நகர அளவில் நடத்தப்படும் பாத யாத்திரைகளில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளில் பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இத்தகைய பாத யாத்திரைகளின் மூலம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையில் பரப்புரையை மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்கிறது.