சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4-ம் நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
முன்னதாக, சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கழிவுநீர் பிரச்சினை ஏற்படுமா என ராயபுரம் தொகுதி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது என தெரிவித்துள்ளார். சென்னைக்கு தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டிஎம்சி; தற்போது 15.560 டிஎம்சி குடிநீர் கொள்ளளவு இருப்பு உள்ளது. போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
திமுக ஆட்சிக்கு வந்தபோது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1,040 எம்.எல்.டி. அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பணிகள் முடிவடைந்த பிறகு வடசென்னை மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள் என்று கூறினார்.
“கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 கழிவு நீர் அகற்றும் நிலையம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியில் கழிவுநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றும் பணி வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும். எந்த இடங்களில் உடனடி தேவை என்பதைக் குறிப்பிட்டால் உடனடியாக முன்னுரிமை தந்து பணிகள் முடிக்கப்படும்” என பதில் அளித்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் 2026-ல் முடிவடையும். பணிகள் முடிவடைந்த பிறகு வடசென்னை மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள் என்றார்.
தடுப்பணை குறித்து சட்டமன்றத்தில் உறுப்பினர் உதயசூரியன் கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில், சிறப்பு நிகழ்வாக கருதி சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டில் மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என கூறியதுடன், கடந்தாண்டு 89 தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு -60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதிக தடுப்பணை கட்ட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான கேள்விக்கு பதில் வறிய அமைச்சர் மூரத்தி, தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது என மேலூர் கிராம மக்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். ஒரு காலத்திலும் டங்ஸ்டன் திட்டத்தை முதலமைச்சர் வர விட மாட்டார்; பேரணியில் ஈடுபட்ட மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தவொக தலைவர் வேல்முருகன் பேசும்போது, தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக என்னுடைய தொகுதியில் இருக்கும் உளுந்தம்பேட்டை, நெல்லி குப்பம், பன்ரொட்டி இந்த பகுதி முழுவதும் பாதிப்புக்குள்ளானது. மத்திய அரசு குழு ஒன்று வந்து பார்த்தது. நம்மளுடைய அமைச்சர்கள் சிலர் வருகை தந்திருந்தார்கள். நானும் இது குறித்து அமைச்சருக்கு கடிதம் ஒன்று தந்து இருக்கிறேன்.
இதற்கு சிறப்பு நிர்வாக கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து நான் சொன்ன இந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டி தரவேண்டும் என அமைச்சர் துரைமுருகனுக்கு கோரிக்கை வைக்கிறேன். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணை நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனவே உங்களுடைய காலத்தில் அதை பண்ணி கொடுங்க அண்ணா” என பணிவாக வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.
உடனடியாக எழுந்த துரைமுருகன் ” உறுப்பினர் வேல்முருகன் சொன்ன அந்த திட்டம் பற்றிய விவரத்தை அதிகாரிகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். அதனை இந்த ஆண்டுக்குள் எடுத்துக்கொள்ளவும் நான் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், இதனை வேல்முருகன் ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் அதை இவ்வளவு நேரம் பேசியதில் நாங்கள் தான் பாதிக்கப்பட்டோம்” என கிண்டலாக அமைச்சர் துரைமுருகன் பதில் கூறினார். உடனே அவையில் இருந்த அமைச்சர்களும் சிரிக்க தொடங்கினார்கள்.
கோயில் நகைகள் குறித்து அதிமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் மட்டுமே உருக்கப்பட்டு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன பதிலளித்தார். மேலும், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கிடப்பில் இருந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு ரூ.11 கோடி திருக்கோயில்களுக்கு வருமானமாக ஈட்டப்பட்டிருக்கிறது. மேலும் இத்திட்டம் தொடரும்.
திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோனை ரூ.10,000-க்கு ஏலத்தில் கேட்ட உரிமையாளரிடமே நேற்று கொடுத்துவிட்டோம். இத்தகைய, கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் ஏலத்தில் திருப்பி தரப்பட்டதை மேற்கொள்ள காட்டி தீர்வு காண முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் அரசு திராவிட மாடல் அரசு என தெரிவித்தார்.
நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே யுஜிசி அறிவிப்பு வெளியான போது , சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு எதிர்த்து போராடும் என முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் தனித் தீர்மானம் கொண்டு வரவுள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.