ஐதராபாத்: சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக, தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
அவர் கூறியுள்ளதாவது, “புதிய என்பிஆர் விதியின் மூலம், பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை மத்திய அரசு கேட்கிறது. இது மிக மிக தவறு. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் எனக்கும்கூட பிறப்பு சான்றிதழ் இல்லை. நான் எந்த நாடு என்று கேட்டால் எப்படி அதை நிரூபிப்பேன்?
நான் என்னுடைய கிராமத்தில், என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது அங்கு மருத்துவமனை இல்லை. எனக்குப் பிறப்பு சான்றிதழே இல்லை. நான் பிறந்தபோது எழுதிய ஜாதகம் மட்டும்தான் இருக்கிறது.
வேறு சான்றிதழ் எதுவும் என்னிடம் இல்லை. அதற்காக என்னால் என்ன செய்ய முடியும்? நான் சாக வேண்டுமா? எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்லாதபோது, என் அப்பாவிற்கு பிறப்பு சான்றிதழ் எப்படி கிடைக்கும். நான் பணக்கார வீட்டில் பிறந்தவன். எங்கள் வீடு 580 ஏக்கரில் அமைந்திருந்தது.
எனக்கே மருத்துவ வசதியோ, பிறப்பு சான்றிதழோ இல்லை. ஏழை மக்களிடம் அந்த சான்றிதழ்களை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? தலித் மக்கள் எப்படி இந்த சான்றிதழ்களை வைத்து இருப்பார்கள். இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இது மிக மிக தவறு. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை போன்றவற்றை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு இதனால் சரிந்துள்ளது. ஐநா அவை இந்தியாவைக் கண்டித்துள்ளது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்.