சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வான கியூட் (CUTE) தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக உள்பட அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாஜக மட்டும், எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செயத்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் – உயர்கல்வி & பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரம் முடிந்த தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, ‘மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலப் பல்கலைக் கழகங் கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில்கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல. அனைத்து மாணவர்களுக்கும் இது சமமான வாய்ப்பினை வழங்கிடாது. தமிழகத்தில் 70% மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பொது நுழைவுத் தேர்வு முறை, பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனால் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை குறையும். நீட் தேர்வைப் போன்றே, இதற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும். இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்’ என்று பேசினார்.
இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றது. மதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மட்டுமே வெளிநடப்பு செய்தனர். பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தீர்மானத்த எதிர்ப்பதாக தெரிவித்தவர், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுதியுடன், தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறி தனது கட்சி எம்எல்எக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
தீர்மானத்தின்மீது பேசியஇ, அதிமுக எம்.எல்ஏ கே.பி.அன்பழகன் பேசுகையில், “மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் நுழைவுத் தேர்வு என்ற கட்டாயம் உருவாகிவிடும். இந்த நுழைவுத் தேர்வை திரும்பப் பெற தேவையான ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். ஏற்கவே நீட் நுழைவுத் தேர்வு விஷயத்திலும் திமுகவுக்கு ஆதரவாக அதிமுக இருந்த நிலையில், தற்பாது கியூட் நுழைவுத் தேர்வுக்கும் ஆதரவு அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தமிழக பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
பொதுநுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள்! மாநில பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்