அகமதாபாத்: குஜராத்தின் நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த நன்டோட் தாலுகாவில் உள்ள வாடியா கிராமத்தின் குடியிருப்பு காலனியானது, தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு சொத்துக்களை விற்கக்கூடாது என்று தனது சமூக உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையால் தலித் சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்படவே, ‘தங்களின் சமூக கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டியவை என்று குறிப்பிடப்பட்ட அம்சங்களின் ஒரு சிறிய பகுதிதான் இது’ என்று அந்தக் குடியிருப்பு காலனியின் சார்பாக சமாளிப்பு விளக்கம் தரப்பட்டுள்ளது.
அந்தக் குடியிருப்பு காலனி வெளியிட்ட துண்டறிக்கை சமூகவலைதளங்களில் பரவி வைரல் ஆனது. எதிர்வரும் பண்டிகைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சொத்துகளை விற்பது தொடர்பான கட்டணங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
அந்த அம்சங்களில், தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு சொத்துக்களை விற்கக்கூடாது என்பதும் ஒரு அம்சம். எனவே, இந்த அம்சத்தை எதிர்த்து, தலித் சமூக பிரதிநிதிகளின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கு எதிரான இத்தகைய சாதியப் பாகுபாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.