வெனிஸ்: கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக, இத்தாலியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 2 நபர்களின் உடல் மிச்சங்களைக் கண்டறிந்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
இத்தாலியின் போம்ப்பீ என்ற இடத்தில், கி.பி.79ம் ஆண்டு வெசுவியஸ் என்ற எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சிக்கி இறந்தவர்களில், இரண்டு ஆண்களின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் அகழ்வாய்வாளர்கள்.
அந்த எலும்புக்கூடுகள், ஒரு பணக்கார ஆண் மற்றும் அவரின் ஆண் அடிமை ஆகியோரினதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதேப் பகுதியில், கடந்த 2017ம் ஆண்டு, மூன்று சேணம் பூட்டப்பட்ட குதிரைகளின் மிச்சங்கள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டு மனிதர்களுடைய உடல் மிச்சங்களின் ஆடை முறைகள் மற்றும் உடல் பாவனை தன்மைகளை வைத்து, ஒருவர் பணக்கார முதியவர் என்றும், மற்றொருவர் அவரின் இளம் வயது ஆண் அடிமை என்றும் கணித்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
அந்த இரண்டு உடல்களும், அருகருகே, 6.5 அடிகள் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளன. கிரிப்டோ போர்டிகஸ் எனப்படும் தரைக்கு அடியிலான வசிப்பிட அடுக்கில் இருந்தபோது, அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.