திருவனந்தபுரம்: வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 163-ஆக உயர்ந்துள்ளது.
மீட்கப்பட்டவர்களை கேரள அமைச்சர் குரியன் ஜார்ஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான பதபதைக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
கேரளம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரிய பாறைகள் மற்றும் மண்ணுடன் கலந்துவந்த காட்டாற்று வெள்ளம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை ஆகிய கிராமங்களைச் சூழ்ந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதைந்தனா்.
நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தால், பசுமை நிறைந்த இந்தக் கிராமங்கள் புதைநிலம் போல் மாறின. மேலும் அந்த பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள முக்கிய பாலமும் நிலச்சரிவில் சிக்கி உடைந்தது. இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாற்று வழியாக மீட்பு படையினர் அந்த பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2வது நாளாக மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. ராணுவத்தின் 300 வீரா்கள், கடற்படை குழுவினா், தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு படையில் உள்பட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. விமானப் படை ஹெலிகாப்டா்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நிரச்சரிவில் சிக்கியவர்களை கூர்ந்து கவனித்து மீட்கப்பட்டு வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சகதியிலும் ஆறுகளிலும் கிடப்பதாகவும், சிலரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , மீட்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் பலரின் சடலங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அட்டமலை மற்றும் மற்றொரு கிராமமும் இந்த நிலச்சரிவால் தொடர்பு இன்றி துண்டிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ஓடும் சாலியாற்றில் பலரது சடலங்களும் கரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது, மீட்பு படையினர் நேற்று இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்து வரப்பட்ட 31 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டது.
போதிய வெளிச்சம் இன்றியும், மழை மற்றும் மோசமான வானிலை இருந்தும் அவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர், இந்த கோர சம்பவத்தில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 163-ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை இன்று (புதன்கிழமை) காலை தெரிவித்துள்ளது. இதுவரை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு உயிருடன் மீட்கப்படுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Photos and Videos: Thanks ANI