புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“கரோனா தொற்றுப் பரவல் 2-வது அலையில் புதுச்சேரியில் தினமும் சுமார் ஆயிரம் பேர் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் ஊசியும் இல்லை.

இதுபோன்ற நிலையில் மத்திய சுகாதாரத்துறை, பல்வேறு மாநிலங்களில் உள்ள ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தைக் கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், எதிர்பாராத விதமாக ரெம்டெசிவிர் மருந்துக்கான ஒதுக்கீட்டைப் பெறும் மத்திய அரசின் பட்டியலில் புதுச்சேரி விடுபட்டுள்ளது. இவ்விஷயத்தில் பிரதமர் தலையிட்டு, குறைந்தது 10,000 ரெம்டெசிவிர் ஊசிகளையாவது புதுச்சேரிக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் ஊசியை வெளியில் இருந்து வாங்கி வர வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்துகிறது. ஆனால், வெளிச்சந்தையில் மக்களால் ரெம்டெசிவிர் ஊசியை வாங்க முடியவில்லை. எனவே, ஜிப்மரில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி கிடைக்கச் செய்வதையும் பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்”.

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.