வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அவரது கட்சியினர் அவரை விட்டு விலகி செல்வதாகப் பிரபல செய்தி ஊடகம் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கறுப்பினத்தவர் ஒருவரைக் காவல் அதிகாரி கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அவர் மரணம் அடைந்தார்.  இதனால் மக்களில் பலரும் அரசு அதிகாரிகள் நிற வெறியுடன் செயல்படுவதாகப் போராட்டத்தை தொடங்கினர்.   அந்த போராட்டம் பல இடங்களில் கலவரமாகி வன்முறை வெடித்தது.  தற்போது நாட்டு மக்கள் போராட்ட ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர் என இரு பிரிவாகப் பிரிந்துள்ளனர்.

சமீபத்தில்  செயிண்ட் ஜான் தேவாலய வாசலில் நின்றபடி ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.   வெள்ளை மாளிகை கலவரத்தின் போது கண்ணீர்ப் புகைக் குண்டு தாக்குதல் நடந்த உடன் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டது.  இது அவர் கட்சியினருக்குச் சற்றே ஆறுதலை அளித்தது.  ஆனால் அதன்பிறகு அவர் தனது டிவிட்டரில் 75 வயதான ஒரு போராளியை எருமை எனத் திட்டியது அந்த ஆறுதலை அடியோடு நீக்கியது.

அது மட்டுமின்றி வெள்ளையர்களுக்கு டிரம்ப் வெளிப்படையாக ஆதரித்து கருத்து தெரிவிப்பது அவர் கட்சியில் உள்ள கறுப்பர் ஆதரவு உறுப்பினர்களுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.  குறிப்பாகக் கட்சியில் உள்ள பல தொழிலதிபர்கள் கறுப்பர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.   அவர்கள் அதிபர் டிரம்ப் பொருளாதார முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதில் சட்ட ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்

அதிபர் டிரம்ப் தனது நிர்வாகம் ராணுவ அதிகாரிகளின் பெயரைக் கொண்ட  ராணுவ தளங்களின் பெயரை மாற்ற உள்ளதாக அறிவித்தார்.  இதில் நீக்கப்பட்ட பல பெயர்கள் கறுப்பின அதிகாரிகளின் பெயர்களாக உள்ளதால் மற்ற அதிகாரிகள் அதிபர் டிரம்ப் மீது கோபம் அடைந்துள்ளனர்.   இவர்களில் பெரும்பாலானோர் டிரம்ப் கட்சி ஆதரவாளர்கள் ஆவார்கள்

ரிபப்ளிக் கட்சியை சேர்ந்தவ பல பிரபலங்கள் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதை ஆதரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.  அவர்களில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், முன்னாள் அரசு செயலர் கோலின் போவெல் உள்ளிட்ட பலர் அடங்குவர்.   இந்நிலையில் அலாஸ்காவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் லிசா முர்கோவிஸ்கி கடந்த வாரம் தாம் டிரம்புக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டுமா என யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி : ஃபோர்ப்ஸ்