சென்னை: தமிழகத்தில் குடியரசு தினத்தன்று வழங்கமாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அதே நாளில் மாநிலங்களிலும் குடியரசுதின விழா கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் குடியரசு தின விழாவை கொண்டாடுமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், குடியரசு தினத்தின்று சென்னை மெரினா கடற்கரையில் காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை தவிர்த்து, வழக்கம் போல பல்வேறு துறையின் அணிவகுப்புகளும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமாக   சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், குடியரசு தின விழாவை பார்க்க மக்கள், மாணவர்கள், குழந்தைகள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,   வயது மூப்பினை கருத்தில் கொண்டு மாவட்டம் தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று ஆட்சியர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.