சென்னை: தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் குறித்த விவரங்களை 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக 400 ஏக்கர் நிலம் காணாமல் போயுள்ளது. தற்போது 7 ஏக்கர் மட்டுமே கோயிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாக,  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத் துறை தஞ்சாவூர் இணை ஆணையர் தென்னரசு பதில் மனு தாக்கல் செய்தார். அதில், காணாமல் போனதாகக் கூறப்படும் செப்புப் பட்டயம், பிரதான பொருளாக அறிவிக்கப்பட்டு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், சில நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதில் யாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது, யார் ஆக்கிரமித்துள்ளார்கள் என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.  இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையரின் பதில் மனுவில் தெரிவிக்கவில்லையே என்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நீதிமன்ற கேட்ட கேள்விக்கு உரிய பதில் மனு தாக்கல்செய்யாத அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது  என்றும் கூறிய நீதிபதிகள், அது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் முழுமையான விவரங்களை இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கையாகத் தாக்கல்செய்ய அறநிலையத்துறைச் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

[youtube-feed feed=1]