தோனி தலைமையில் இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்த அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டதென்னாப்பிரிக்க வீரர் கேரி கிரிஸ்டன் “தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது மிக மோசமான முடிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.
தோனிக்கு பதிலாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டபோது அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், “ இதற்கு நீங்கள் என்னிடமிருந்து பதிலை பெறமுடியாது. ஆனால் தோனியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீங்குவது ஆபத்தான முடிவு. ஏனென்றால் திறமைசாலிகளால் தங்கள் பணியிலிருக்கும் எல்லா காலங்களிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த இயலும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், நீங்கள் இப்போது தோனியை தவறவிட்டால் 2019-இல் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் சில முக்கிய போட்டிகளில் வெற்றியை நிச்சயம் தவறவிடுவீர்கள். 2019 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்று எனக்கு தெரியாது. அது அவரது சொந்த விருப்பம். ஆனால் அவர் விளையாடாமல் போனால் நஷ்டம் உங்களுக்குத்தான்.
அவரது திறமையை சந்தேகிப்பவர்கள் இமாலய தவறு செய்கிறார்கள். நான் பார்த்ததில் அவர் மிகச்சிறந்த வீரரும் கேப்டனுமாவார். இதை நான் சொல்ல தேவையில்லை, அவர் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றிகளும் அவரது சொந்த சாதனைகளுமே இதை பறைசாற்றும்.
அணியில் அவர் எத்தனையாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினால் நல்லது என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் 4 வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஆனால் அவரால் எத்தனையாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினாலும் ஜொலிக்க முடியும். குறிப்பாக இந்தியா வெற்றிபெற 100 ரன்கள் தேவை என்ற நேரத்தில் அவர் களமிறங்குவது நல்லது என்பது எனது கருத்து” என்று கிரிஸ்டன் தெரிவித்தார்.
மேலும், அனில் கும்ப்ளே இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, கும்ப்ளே மிகச்சிறந்த மனிதர், நல்ல திறமைசாலி. அவர்மீது அணியின் வீரர்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருக்கிறது. அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி செல்வார் என்று நம்க்கை தெரிவித்தார்.